உடல் எடை அதிகரிப்பு, இன்றைய உடல் உபாதைகளில் பெரும் பங்கு வகிக்கிறது. உலக மக்களில் மூன்றில் ஒருவர் எடை கூடுதலாகவும், பத்தில் ஒருவர் அதிக எடையுடனும் காணப்படுகின்றனர் (அதிக எடை பற்றி கவலைப் படுகிறவர்களுக்கு ஆறுதலான செய்தி!). இதன் முக்கியக் காரணம் இன்றைய வசதி வாய்ப்புகள் மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றம். நம் முன்னோர்கள் கற்றுத்தந்த உணவு முறைகளை நாம் கிட்டத்தட்ட மறந்து வருகிறோம் என்பது உண்மை.
ஒரு பெண் நல மருத்துவர் அடிக்கடி சொல்வதுண்டு. பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்குக் காரணம் தற்போது பெண்கள் நின்று கொண்டு சமையல் செய்வதும், அதோடு, மேசையில் அமர்ந்து சாப்பிடும் முறையினாலும்தான் என்று. இதனால், காலுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி குறைந்ததே காரணம். கீழே உட்கார்ந்து எழுந்து சமையல் செய்யும் போதும், சாப்பிடும் போதும் காலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. அதோடு, அடுப்பிலிருந்து எழும் சூடு கால் மூட்டுக்கு நல்லது என்றும் அடிக்கடி சொல்லுவார். இது ஆண்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.
வாகன வசதியினால் நடப்பது, சைக்கிளில் போவது குறைந்து போய், இயல்பான நடை தேகப்பயிற்சியாகி விட்டது. நம் வாழ்முறை மாற்றத்தைக் குறிக்கவே இந்த சிறிய உதாரணங்கள்.
வாகன வசதியினால் நடப்பது, சைக்கிளில் போவது குறைந்து போய், இயல்பான நடை தேகப்பயிற்சியாகி விட்டது. நம் வாழ்முறை மாற்றத்தைக் குறிக்கவே இந்த சிறிய உதாரணங்கள்.
உடல் பருமனுக்குக் காரணங்கள் பல உண்டு. அதில் முக்கியமானது அன்றாடம் நம் உடலில் நடைபெறும் நிகழ்வுகளைக் கட்டுக்குள் வைத்துருக்கும் சுரப்பிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தைராய்டு சுரப்பி. இந்த சுரப்பி இயங்க அயோடின் என்ற தாது மிக முக்கியம். அதனால்தான், அரசு அயோடின் கலந்த உப்பை கட்டாயமாக்கியது. இந்த அயோடின் நமக்குத் தேவைப்படும் அளவு மிகமிகக் குறைவு. இயற்கையிலேயே நமக்குக் கிடைக்காதா என்று நீங்கள் கேட்கலாம். கிடைக்கும்தான். பல காய்கறிகளில், மீன், கடல்பாசி போன்ற பலவற்றில் உள்ளது (கடல் உணவு சாப்பிடுபவர்களுக்கு அயோடின் தாராளமாகக் கிடைக்கும்). விளைநிலத்தில் உள்ள அளவைப் பொருத்தே, விளை பொருட்களில் அதன் அளவு அமையும். தைராய்டினால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. பிரச்சனை அதிகமாகும் போதோ, அல்லது வேறு காரணங்களுக்காக மருத்துவரை அணுகும் போதுதான், இது கண்டறியப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மாத்திரையில் வாழவேண்டிய சூழல். இத் தைராய்டு சுரப்பியின் பாதிப்பில் உடல் எடை கூடுவதும் ஒன்று.
உடல் பருமனைக் குறைக்க இன்று பல வழிமுறைகள் விளம்பரப்படுத்தப் படுகின்றன. சமீபத்தில், விஜய் டிவி நீயா நானாவில், ஒரு பெண்மணி, லட்சக்கணக்கில் செலவழித்தும் பலனில்லை என்றார். இதற்குத் தேவை திட்டமிட்ட வாழ்க்கையே தவிர வேறு செலவுகள் தேவையில்லை (மருத்துவ ரீதியிலான காரணங்கள் இருந்தால் தவிர). உடல் பருமானால், கால் மூட்டுவலி வருவது இயற்கை. உங்கள் எடை உங்கள் கையில்தான் உள்ளது. கவலைப்படுவதை விட்டுவிட்டுத் திட்டமிடத் தொடங்குங்கள்.
முதலில் நம் உடலின் இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏன் சாப்பிடுகிறோம்? நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு, நம் உடலில் நடைபெறும் செரிமானம், இதயம், நுரையிரல் போன்றவற்றின் இயக்கத்திற்கு எனர்ஜி (சக்தி) தேவை. எப்படி ஒரு மோட்டார் வாகனம் செல்ல எரிபொருள் தேவையோ அதுபோல் நம் உடல் நன்றாக இயங்க, நம் அன்றாட வேலைகளை அசதியின்றி செய்ய உணவு அவசியம்.
உணவினை (அதாவது எரிபொருளை), கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்பு என்று மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். கார்போஹைடிரேட் உடனடியாகக் குடல் வழியாக உறிஞ்சப்பட்டு நமக்கு எனர்ஜியைக் கொடுக்கிறது. இதனால்தான், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. புரதம், நம் உடல் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். கொழுப்பும் மித அளவில் தேவையான ஒன்று. நம் உணலில் கார்போஹைடிரேட் அளவு நம் அன்றாட உடல் தேவைக்கு ஏற்ப சரியான அளவில் இருக்க வேண்டும். இதைத்தான் கலோரி என்று சொல்வார்கள். நம் ஒவ்வோரு செயலுக்கும் ஒரளவு சக்தி (எனர்ஜி) தேவைப்படும். அதை உடனடியாக ஈடு செய்வதுதான் கார்போஹைடிரேட்டின் வேலை.
நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைடிரேட் மற்றும் கொழுப்பின் அளவு அதிகமாகும் போது, அதிக அளவிலான கொழுப்பு உடலில் தேங்கத் தொடங்குகிறது. கார்போஹைடிரேட், கொழுப்பு மற்றும் புரதம் மூன்றுமே 'சக்திக்காக' செலவழிக்கமுடியும். கார்போஹைடிரேட் இல்லாத போது, கொழுப்பு சக்திக்காக எடுக்கப்படுகிறது. புரதமும்தான். அதனால், கார்போஹைடிரேட் நமக்கு அவசியம் ஆனால் அளவோடு தேவை. அதிக எடை என்பது கொழுப்புச் சத்து கூடுதலையே உணர்த்தும். அதித கொழுப்பு நமக்கு இதயம் சார்ந்த நோய்கள், நீரழிவு, ஆர்த்தரிட்டீஸ் மற்றும் கேன்சர் போன்றவைகளுக்கு வழிவகுக்கும்.
ஆனால், உடல் பருமனடையாமல் நம்மால் தடுக்க இயலும் என்பது நிதர்சன உண்மை. நாம் நம் உணவு மூலம் எடுத்துக் கொள்ளும் சக்திக்கும், நாம் அன்றாடம் செயல்கள் மூலம் செலவழிக்கும் சக்திக்கும் ஒரு சமநிலையை உருவாக்கினால் இதற்குத் தீர்வு காண முடியும்.
நீங்கள் பருமனான உடல்நிலையில் இருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ள உங்கள் எடை மற்றும் உயரத்துடன் கீழ்க்கண்ட இணையத்தளத்தில் சென்று சரிபார்கவும்.
http://www.vlcc.co.in/wm-bmi.aspஇதில் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, மெல்லினமாக இருக்க வேண்டும் என்று சரியாகச் சாப்பிடாமல், எடை குறைந்த நிலையை அடைவது. அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. குறையவும் சாப்பிடக் கூடாது. சத்தான மற்றும் போதுமான உணவு நம் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம்.
நீங்கள் ஒரு வாரத்திற்கு தினமும் சாப்பிடும் உணவு மற்றும் அதன் அளவு ஆகியவற்றைப் பட்டியலிடுங்கள். அதனோடு, நீங்கள் செய்யும் வேலைகள் என்ன என்பதையும் பட்டியலிடுங்கள். உடல் பருமன் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்துள்ளதைக் குறிப்பதால், அன்றாட உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் சக்தியின் (அதாவது கார்போஹைடிரேட்) அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் (5 இட்லிக்குப் பதில் 4 இட்லி என்பது மாதிரி). இந்த அளவு குறைப்பு என்பதை நீங்களே திட்டமிடல்லாம். உதாரணமாக, ஒரு வாரத்திற்கு ஒரு இட்லியைக் குறைத்துப் பாருங்கள். உங்களால் சமாளிக்க முடியும் என்றால், அடுத்த வாரம், இரண்டு இட்லியைக் குறையுங்கள். அதிக பட்சமாக, மூன்றில் ஒரு பங்கு மட்டும் குறைத்துப் பாருங்கள். இதில் முக்கியம், இட்லி போன்ற அதிக கார்போஹைடிரேட் உணவுகளுக்குப் பதில், வேறு தானிய உணவுகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதோடு, தினமும் 30 நிமிடமாவது அவசியம் உடற்பயிற்சி தேவை (நன்கு வேர்க்க வேண்டும்). சர்க்கரையைத் தவிர்த்தல் நல்லது. அதற்குப்பதில், பனங்கல்கண்டு சேர்த்துப் பழகலாம். ஓட்ஸ் ஒரு நல்ல முழு தானிய உணவு. தினமும், ஓட்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரீன் டீ பிடித்தவர்கள், தினமும் 2 கப் சர்க்கரையில்லாமல் குடித்தால் நல்லது. இவையெல்லாம், உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைந்து போகச் செய்யும்.
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது, உடல் பருமன் நாம் அதிக அளவில் கார்போஹைடிரேட் எடுத்துக் கொண்டு வருவது அல்லது எடுத்துக் கொள்ளும் அளவை விடக் குறைவாகச் செலவழிப்பதைக் குறிக்கும். அதனால், எடுத்துக் கொள்ளும் அளவை சிறிது குறைத்து (நாம் அன்றாடம் செய்யும் வேலையைப் பொறுத்து), உடல் பயிற்சியைக் அதிகரித்து சமநிலைப்படுத்த வேண்டும்.
உடல் எடையை அதி வேகமாகக் குறைக்க நினைப்பதும், உணவை மிக அதிக அளவில் குறைப்பதும் பல வேறுபட்ட உபாதைகளை உருவாக்கும். உணவு, அதுவும் சத்தான உணவு, தேவை. ஆனால், நம் தேவைக்கு இருந்தால் போதும். எடையை எளிதில் கூட்டி விடலாம். ஆனால், குறைக்க படாதுபாடு பட வேண்டும்.
முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது. உங்களுக்கு, ஏற்கனவே இதயம் சம்பந்தமான மற்றும் நீரழிவு நோய் இருக்குமானால், கண்டிப்பாக ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
எடையைக் குறைக்க வழி காண்பிகிறேன் என்று ஏராளமான ஏமாற்றுப் பேர்வழிகள் பணம் பிடுங்க அலைகிறார்கள். பணத்தையும் வீணாக்கி, உடல்நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...
No comments:
Post a Comment