hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Tuesday, 5 June 2012

உலகச் சுற்றுச்சூழல் தினம்...நாம் என்ன செய்தோம்?

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம்...நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியம் என்பது தெரியாமலேயே பலர் அலட்டியம் காட்டுகின்றனர். சூழலுடன் இணைந்த வாழ்க்கை என்பது காணாமல் போய் விட்டது. இயற்கையை அழித்து இயற்கைக்கு மாறாக நாம் வாழ ஆரம்பித்து விட்டோம். அதன் விளைவுகள் பலவிதத்தில் நம்மைத் தாக்க ஆரம்பித்து விட்டன. 


மரங்களினால் என்ன பயன் என்று கேட்டால் நிச்சயமாக பல பேர் சரியான பதில் சொல்ல மாட்டார்கள். மரங்கள் வெட்டப்படும் போது ஏனோ என் மனம் கனத்துப் போகிறது. மரங்கள் நம் இயற்கைக்கு மாறான செயல்களால் வெளிப்படும் கரியமிலவாயுவை கிரகித்து அதை கார்பனாக மாற்றி தன் உடலில் சேமிப்பதோடு, தூய பிராணவாயுவை நமக்காக வெளிவிடுகிறது. பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று கரியமில வாயுவின் அளவு அதிகரித்து உலக உஷ்ணமயமாதலைப் பற்றி பேசிக்கொண்டுருக்கிறோம். தன்னலமில்லாமல் நமக்காக நன்மை செய்யும் மரங்களை வெட்டுவது பாவச்செயல்தானே?


இந்த கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் இருந்து நீக்குவதில் பெரும் பங்கு வகிப்பது கடல். ஆனால், நாம் நிலத்தில் ஏற்படுத்தும் மாசுகள் நேரடியாகக் கடலைச் சென்று அடைவது எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் வீசி எரியும் பாலிதீன் பைகளை உணவாக நினைத்து உண்டு மாண்டு போகும் கடல் உயிரினங்கள் எத்தனை தெரியுமா?


உலகில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் (நம்மையும் சேர்த்துத்தான்) ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. உணவுச் சங்கிலி என்ற பிணைப்பில் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இதில் பங்கேற்கும் ஒன்றுக்கு பாதிப்பு என்றால் கூட அதைச் சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும்.

உணவு உற்பத்திப் பெருக்கம் என்று சொல்லி உணவு, மண் இரண்டும் விசமாகிப் போனதுதன் நிஜம். நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று மினரல் வாட்டர் பிரபலமானதுக்குக் காரணம் என்ன?


சரி...இதெல்லாம் நாமா செய்றோம்...நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைக்காமல் நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்க முடியும்...பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை சாலைகளில் போடுவதைத் தவிர்க்கலாம். உபயோகிக்கும் நீரை சிக்கனப் படுத்தலாம். அநாவசிய மின்சார உபயோகத்தைத் தவிர்க்கலாம்...இன்று ஒரு மரக்கன்றை வீட்டருகில் நட்டு நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்கலாமே? குழந்தைகளுக்கு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்...நம் வீட்டுச் சூழலை ஆரோக்கியமாக வைத்தாலே பெரிய சாதனைதானே?

உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை இன்று செய்யலாமே?

No comments:

Post a Comment