hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Wednesday, 28 September 2011

இதய நாள்...செப்டம்பர் 29ம் தேதி....உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..

இதய நாள்...

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29ம் தேதி இதய நாளாக அனுசரிக்கப்படுகிறது.....

இதயம் மற்றும் அதைச் சார்ந்த இழுப்பு நோய்களால் ஆண்டு தோறும் சுமார் 173 லட்சம் மக்கள் இறந்து போவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே எதிரி என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், இதயம் மற்றும் அதைச் சார்ந்த இழுப்பு நோய்கள் அதிகரிக்கக் காரணம் நம்முடைய வாழ்முறை மாற்றம்தான். இந்த நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பவை அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக அளவு கொழுபு மற்றும் சர்க்கரை, புகை பிடித்தல், காய்கறிகளை அறவே ஒதுக்குதல், தேவைக்கதிக உடல் எடை, உடல் மருமன், மன உழைச்சல் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை.

கைமுட்டி அளவே இருந்தாலும், நம் உடல் பாகங்களிலேயே வலுவான சதை அமைப்பைக் கொண்டது இதயம். நிமிடத்திற்கு சுமார் 70 முறை துடிக்கும் இதயம், உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிராணவாயு மற்றும் சத்துக்களை எடுத்துச் செல்கிறது. உடல் உழைப்புக்கு ஏற்ப துடிக்கும் வேகம் அதிகரிக்கும்.

இந்த இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இப்பொழுதெல்லாம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆனால், வருமுன் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன செய்யலாம்? சத்தான ஆரோக்கியமான உணவு, தினப்படியான உடற்பயிற்சி மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகிக்காமை ஆகியவை நிச்சயம் தற்காத்துக் கொள்ள உதவும். இதில், புகையிலை சார்ந்த பொருட்கள், உதாரணமாக சிகரட் புகைத்தல், அருகில் இருப்பவர்களையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை. புகை பிடித்தல் இதய நோயின் வேகத்தைப் பலமடங்கு அதிகரிக்கும்.

கரோனரி ஆர்ட்டரி என்ற இரத்தக் குழாய் மூலம் இதயத் தசைகளும் பிராணவாயு மற்றும் சத்துக்களைப் பெறுகின்றது. இதயத்திற்கு செல்லும் இரத்தம் அடைப்பினால் தடைப்படும் போது, இதயத்திற்கு செல்லும் பிராணவாயு மற்றும் சத்துக்கள் அளவு குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் உடனடி நிகழ்வுதான் மாரடைப்பு. இந்தத் தடை குறைந்த அளவில் இருந்து, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறந்தால், 'ஆஞ்சினா' என்ற நெஞ்சு வலி ஏற்படும். மாரடைப்பு வருவதற்கான முன்னறிவிப்பாகவே இதை எடுத்துக் கொள்ளலாம். இதே இரத்த ஓட்டத்தடை மூளையில் ஏற்படுமானால், மூளைப்பகுதி செயலிழந்து இழுப்பு ஏற்படுகிறது. இதை உடனடியாகக் கவனித்து மருத்துவ உதவி அளித்தால், அதிகளவிலான பாதிப்பைத் தடுக்கலாம். உயர் இரத்த அழுத்தமும் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து பாதிப்பை ஏற்படுத்தும்.

வாழ்முறை மாற்றம் நம் ஆரோக்கியத்திலும் மாற்றத்தை, பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வாகனவசதி நாம் அழுங்காமல் சென்று வர உதவி செய்து கூடவே நம்மையறியாமல் நோய்நொடிகளையும் கொண்டு வருகிறது. உடல்பயிற்சி என்பதே இல்லாமல் போய் நடப்பதே உடற்பயிற்சியாகி விட்டது. இன்றைய குழந்தைகள் விளையாடக் கூட நேரம் இல்லாமல் படிப்பதால், உடல் பருமானகி இளம் வயதிலேயே நோய்களுக்கு வித்திடுகின்றனர். 

தொத்து அல்லாத வாழ்முறை நோய்கள் இன்றளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சர்க்கரை நோய், புற்று நோய் இவற்றுடன் இதய நோய்களும் அடங்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியம். இவர்கள், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் நல்லது.

தொழில்நுட்பம் எவ்வளவு மாறினாலும், மாரடைப்பு ஏற்படும் பொழுது அதற்கான நோய்க்குறிகளை அடையாளம் காணத்தெரியாமல் இருப்பது வருத்தத்தக்கது. மாரடைப்புக்கான நோய்க்குறிகளில் நடுநெஞ்சில் வலி/அழுத்தம், அதிக வேர்வை, தோள்பட்டைகளில் வலி/உழைச்சல், தாடை வலி, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி போன்றவை முக்கியமானவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வலி தெரியாமல் போகலாம். வயிற்றுக் கோளாருக்கும் (வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவை) மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருத்துவரால் மட்டுமே இனம் காண முடியும். அதே மாதிரி, மூளை பாதிப்பில் கவனிக்க வேண்டியது, பேச்சு, புரிதலில் குழப்பம், நடையில் தடுமாற்றம், மயக்கம், உடல்பாகங்கள் மறத்துப் போதல் போன்றவை. பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். 

இந்தக் கட்டுரை உங்களைப் பயமுறுத்த அல்ல. உங்களிடம் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கே. உங்களுக்குத் தெரியவேண்டும் என்றுதான் இந்த விபரங்கள். பயந்து விடாதீர்கள், அதே சமையம், அலட்சியமாகவும் இருந்து விடாதீர்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் இமயமலையைப் பிரட்ட வேண்டியதில்லை. உங்கள் வாழ்முறையில் ஒருசில சிறிய மாற்றங்கள் செய்தால் போதும். ஆரோக்கியமான இதயத்துடன் உற்சாகமாக வாழலாம். சரி, என்ன அப்படி ஒருசில சிறிய மாற்றங்கள்?

தினமும் 30 நிமிடங்களாவது வேர்க்கவிருவிருக்க உடற்பயிற்சி செய்யவேண்டும். அல்லது, காலை அல்லது மாலை வேலைகளில் அரை மணி நேர வேகநடை போதும்.

உடல் எடையில் கவனம் தேவை. உடல் எடையை சீராக வயது, உயரத்திற்குத் தகுந்தவாறு பேணி வர வேண்டும். அதே சமயம், எடையைக் குறைக்கிறேன் என்று ஆரோக்கியமான் உணவைத் தவிர்ப்பது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். உடல் பருமன் பற்றிய என்னுடைய செய்தியை இதே பகுதியில் படித்துப் பாருங்கள்.


அதிகக் கொழுப்பு நிறந்த உணவுகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. வயது அதிகரிக்கும் போது, மாமிச உணவுகளைக் குறைத்து வருவது நல்லது. அதற்குப் பதில் மீன் போன்றவற்றை குறிப்பாகக் கடல் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
 
எண்ணையில் ஆழ்ந்து வறுத்தெடுக்கப்பட்ட பதார்த்தங்களை அறவே தவிர்த்தல் நல்லது.
 
தினமும் குறிப்பிட்ட அளவில் காற்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
 
சாப்பிட்டவுடன், குளிர்ந்த பானங்களைக் குடிப்பது தவறு. அதிகக் கொழுப்பு குடலில் இருந்து உறிஞ்சப்படக் காரணமாகிவிடும்

இதயத்திற்கு மிகப்பெரிய எதிரி நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு. உப்பு குறிப்பிட்ட அளவில் நமக்குத் தேவை. உணவு செய்முறையில் சேர்க்கப்படும் அளவான உப்பே நமக்குப் போதும். அதிகளவிலான உப்பு வில்லங்கத்தில்தான் முடியும்.

மன உழைச்சல் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. இதய நோய்களிலும் இதன் பங்கு முக்கியம். இன்றைய காலகட்டத்தில், இதற்கான வாய்ப்புகள் அதிகம். மனம் விட்டு யாரிடமாவது பேசுவது, தியானம் போன்றவற்றால் இதன் பாதிப்பைக் குறைக்கலாம். 

பூண்டு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். பச்சையாக சில பூண்டு பற்களை மென்று சாப்பிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றால், கொதிக்க வைத்து இறக்கிய பாலில் 10 பூண்டு பற்களைப் போட்டு மூடி வைத்தால், பால் ஆறும்போது அதிலுள்ள பூண்டும் நன்கு வெந்திருக்கும். பூண்டை சாப்பிட்டு பாலையும் குடித்து விடவேண்டும். மாதம் இருமுறை சாப்பிட்டால் போதும். இரத்த அழுத்தம் மற்றும் இரத்ததில் அதிகக் கொழுப்பு சேருவதைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவில்லையெனில்... இனியாவது முயற்சி செய்யுங்கள்...வாழும்வரை ஆரோக்கியமாக வாழலாமே!

No comments:

Post a Comment