hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Wednesday, 18 January 2012

தேங்காயாக இருந்து கொட்டாங்குச்சியாக மாறிய கிராமங்கள்...

இயற்கை விவசாய ஆர்வலர் திரு. நம்மாழ்வார் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சொன்ன ஒரு விசயம் எல்லோரையும் யோசிக்க வைக்கும். முன்பு 'தேங்காயாக இருந்த கிராமங்கள் இன்று கொட்டாங்குச்சியாக மாறி விட்டன' என்பதே அது. எத்தனை யதார்த்தமான விசயம்! மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன அப்படி இருக்கு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், கூர்ந்து பார்த்தால் அதில் இயற்கையென்னும் யதார்த்தத்தைத் தொலைத்து விட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் மனித சமுதாய பாதிப்பு புரியும். இன்று விளை நிலங்கள் விஷ நிலங்களாக மாறி விட்டதுதான் யதார்த்தம். இரசாயன உரங்கள், கொடிய பூச்சி கொல்லி மருந்துகள் என பல ஊறு விளைவிக்கக் கூடிய விசயங்களைச் சார்ந்தே இன்றைய விவசாயம் இருக்கிறது. விளைபொருள் உற்பத்தி பெருகினாலும், இன்று நாம் பெரும்பாலும் உண்பது விஷ உணவுக்களைத்தான். இதன் தாக்கம் இன்று பல நோய்நொடிகள். இன்றும் பலர் தாங்கள் உண்பது விஷம் என்று அறியாமல் இருப்பது பரிதாபம்.

இயற்கைக்கு எதிரான நம் செயல்களின் பலனை இன்று நாமே சந்திக்க வேண்டிய கட்டாயம். பருவநிலை மாறுதல்கள், எதிர்பாரா இயற்கைப் பேரிடர்கள் என்று இயற்கை நமக்கு எதிராகத் திரும்பியது உண்மை. உஷ்ஷ்..ப்பப்பா என்ன வெயில் என்பவர்கள் அதற்குக் காரணம் இயற்கை அல்ல, இயற்கைக்கு எதிராக நாம் செய்த சதியின் பிரதிபலன்தான் என்பதை உணரவில்லை என்பதே கவலை தரும் விசயம். மரங்களினால் நமக்கு என்ன பயன் என்று அறியாமலே மரங்களை வெட்டிச்சாய்க்கும் பலர் இன்றும் உள்ளனர்.

இயற்கை விவசாயம் என்று பிரபலமாகப் பேசப்படும் இன்றைய விசயம் ஒன்றும் புதிது இல்லை. நம் முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததை இப்போது நாம் செய்ய முனைகிறோம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகளின் மேல் பூச்சிகொல்லி மருந்து காணப்படுவது உண்மை. அதுதான் நல்லா கழுவி விடுகிறோமே என்பவர்களுக்கு ஒரு விசயம். தாவரங்கள் இத்தகைய விஷங்களை உட்கிரகித்து, அவை அவற்றுக்குப் பயன்படாததால் சேர்த்து வைத்து விடும். இதை நாம் கழுவி வெளியேற்ற முடியாது. பூச்சி கொல்லி மருந்துகள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை அந்த மருந்துடன் வரும் விவரங்களைப் படித்தாலே தெரியும். மனித எண்ணிக்கை உயர்வு சார்ந்த உணவு உற்பத்திப் பெருக்கம் நோய்களை அதிகரித்திருப்பதுதான் வேதனை. இத்தகைய விஷங்கள் விளைநிலங்களைப் பாழ்படுத்துவது உண்மை. நாம் உண்ணும் உணவே விஷமாகி நம்மை அச்சுறுத்துகிறது...

No comments:

Post a Comment