hi friends...

welcome to my world....hope it makes your stay & reading enjoyable....

Saturday, 28 July 2012

ஒலிம்பிக்ஸ்-திறமைசாலிகள் இங்கே...வாய்ப்பு எங்கே?

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் தொடங்க கொஞ்சம் முன்னாடி, நாம சுதாரிச்சு வீரர்களை ஒரு வழியா தேர்வு பண்ணி (அதிலும் சிபாரிசுதான்!) அனுப்பிட்டு பதக்கம் கிடைக்குமா கிடைக்காதான்னு பதக் பதக்குனு இங்கன உக்கார்ந்துக்கிட்டு ஆருடம் சொல்லிட்டு போட்டிகள் முடிந்தவுடனே மறந்துட்டு வேற வேலையைப் பாக்கப் போயிருவோம் (பின்ன வேற வேல வெட்டி இல்லாமலா இருக்கோம்!!)..அடுத்த போட்டி வரும் வரை அதைப் பற்றி யோசிக்க நமக்கு ஏது நேரம்?...ஆனா, நான் யோசிச்சு யோசிச்சுப் பாத்ததுல (வீட்டுல உட்காந்துதான்...ரூம் போட்டு இல்ல), ஒரு விசயம் தெரிஞ்சது...போட்டில கலந்துக்கிறவங்க பெரும்பாலோனோருக்கு பதக்கத்த எப்படியாவது ஜெயிக்கனும்கிற வெறி இல்ல (அப்படி வெறி இருக்கிறவங்களதான் செலக்ட் செய்யமாட்டோம்ல!)...சும்மா ஊறு சுத்திட்டுதான் வாராங்க...மத்த நாடுகள்ள, ஒரு போட்டி முடிந்தவுடனே அடுத்த போட்டிக்கு வீரர்களைத் தயார் படுத்த ஆரம்பிச்சுறாங்க...ஆனா, இங்கன?...அடுத்த போட்டி தொடங்க கொஞ்சம் முன்னாடிதான் யோசிக்கவே ஆரம்பிப்போம்....இதுல விஷேசம் என்னன்னா, ஒவ்வொரு விளையாட்டுக்கும் உள்ள அமைப்பின் தலைமைல இருக்கிறவங்கள்ள முக்கால்வாசிக்கும் மேல சுறுசுறுப்பான 60 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள்தான்...சரி, நம்ம கதைக்கு வருவோம்..எப்படி போட்டில ஜெயிகிறது...எப்படி பதக்கத்த வாங்குறதுனு யோசிச்சப்ப (இந்த தடவ ரூம் போட்டுதான்!)...நாம நம்மிடையே உள்ள திறமையானவர்களை மதிக்கிறதே இல்லைன்னு தோணுது...அத மட்டும் நாம பயன்படுத்திக்கிடா எல்லாப் பதக்கமும் நமக்குதான்...

ஹாக்கி, புட்பால் என எல்லா விளையாட்டுலேயும் நளினம் போய் முரட்டுத்தனமா மாறிடுச்சு..நம்ம வீரர்களை மற்ற நாட்டு வீரர்களுக்குப் பக்கத்துல பாத்தா பாவமாத்தான் இருக்கு....நம்ம ஊர் சினிமால வருகிற வாட்டசாட்டமான் வில்லன் கோஸ்டிகள் எல்லாம் கண்ணுக்குத் தெரியலயா?...இவர்களைத் தயார் பண்ணி இந்த விளையாட்டுக்கள்ள விளையாடச் செய்தா ஒரு பய கிட்ட நெருங்க முடியுமா?...அதுமாதிரி, உயரம் தாண்டுதல்லுக்கு, நம்ம ஊர் கதாநாயன்களை அனுப்பலாம்ல?..எவ்வளவு உயரம்னா என்னா? சும்மா அனாசியமா தாண்டி பதக்கம் வாங்கிட மாட்டாங்க?கதாநாயகனோட ஒவ்வொரு அடியும் இடியா விழுது...குத்துச்சண்டைக்கு இதவிட என்ன தகுதி வேணும்?..ஒட்டப் பந்தயத்துக்கு பல தகுதியானவர்கள் இருக்காங்கப்பா...மக்கள ஏமாத்திட்டு தலதெறிக்க ஓடி காணாமல் போகிற சீட்டுக் கம்பனி ஆட்களின் சாமர்த்தியம், கதாநாயகனும் அவரை அடிக்கத் துரத்தும் வில்லன் கோஸ்டியும் சிலநிமிட நேரத்தில் பல மைல் ஓடும் சாகசம், நாய் துரத்த தலைதெறிக்க ஓடும் அப்பாவி கால்நடை வாசிகள்...கவட்டை வில்லால் குறிபார்த்து கரட்டாண்டி எனப்படும் ஓணானை அடிக்கும் சிறுவர்கள் குறிபார்த்து அம்பை எய்ய மாட்டார்களா என்ன? இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..
இப்படி ஆட்களையெல்லாம் உட்டுட்டு....இந்த மாதிரி திறமையானவர்களையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கிடனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேங்க...

இத யார் மனதையும் புண்படுத்தனும்னு சொல்லலைங்கோ... திறமையானவர்கள் இருந்தும் பயிற்சிக்கான வாய்ப்பு, நவீன வசதி இல்லாமை; நேர்மையற்ற தேர்வுமுறை,வீரர்கள் எந்தக் கவலையும் இன்றி பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துதல், திறமை வாய்ந்தவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தல்...இதல்லாம் நடக்குமா என்ற ஆதங்கம்தான்..இத்தனை கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒரு பதக்கம் பெற முக்கிமுனக வேண்டியிருப்பது அவலம்...சீன நாட்டினரால் சாதிக்க முடிந்ததை நம்மால் சாதிக்க முடியாதா என்ற ஆதங்கம்தான்....

Tuesday, 5 June 2012

உலகச் சுற்றுச்சூழல் தினம்...நாம் என்ன செய்தோம்?

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம்...நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியம் என்பது தெரியாமலேயே பலர் அலட்டியம் காட்டுகின்றனர். சூழலுடன் இணைந்த வாழ்க்கை என்பது காணாமல் போய் விட்டது. இயற்கையை அழித்து இயற்கைக்கு மாறாக நாம் வாழ ஆரம்பித்து விட்டோம். அதன் விளைவுகள் பலவிதத்தில் நம்மைத் தாக்க ஆரம்பித்து விட்டன. 


மரங்களினால் என்ன பயன் என்று கேட்டால் நிச்சயமாக பல பேர் சரியான பதில் சொல்ல மாட்டார்கள். மரங்கள் வெட்டப்படும் போது ஏனோ என் மனம் கனத்துப் போகிறது. மரங்கள் நம் இயற்கைக்கு மாறான செயல்களால் வெளிப்படும் கரியமிலவாயுவை கிரகித்து அதை கார்பனாக மாற்றி தன் உடலில் சேமிப்பதோடு, தூய பிராணவாயுவை நமக்காக வெளிவிடுகிறது. பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று கரியமில வாயுவின் அளவு அதிகரித்து உலக உஷ்ணமயமாதலைப் பற்றி பேசிக்கொண்டுருக்கிறோம். தன்னலமில்லாமல் நமக்காக நன்மை செய்யும் மரங்களை வெட்டுவது பாவச்செயல்தானே?


இந்த கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் இருந்து நீக்குவதில் பெரும் பங்கு வகிப்பது கடல். ஆனால், நாம் நிலத்தில் ஏற்படுத்தும் மாசுகள் நேரடியாகக் கடலைச் சென்று அடைவது எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் வீசி எரியும் பாலிதீன் பைகளை உணவாக நினைத்து உண்டு மாண்டு போகும் கடல் உயிரினங்கள் எத்தனை தெரியுமா?


உலகில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் (நம்மையும் சேர்த்துத்தான்) ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. உணவுச் சங்கிலி என்ற பிணைப்பில் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இதில் பங்கேற்கும் ஒன்றுக்கு பாதிப்பு என்றால் கூட அதைச் சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும்.

உணவு உற்பத்திப் பெருக்கம் என்று சொல்லி உணவு, மண் இரண்டும் விசமாகிப் போனதுதன் நிஜம். நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்று மினரல் வாட்டர் பிரபலமானதுக்குக் காரணம் என்ன?


சரி...இதெல்லாம் நாமா செய்றோம்...நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைக்காமல் நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்க முடியும்...பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை சாலைகளில் போடுவதைத் தவிர்க்கலாம். உபயோகிக்கும் நீரை சிக்கனப் படுத்தலாம். அநாவசிய மின்சார உபயோகத்தைத் தவிர்க்கலாம்...இன்று ஒரு மரக்கன்றை வீட்டருகில் நட்டு நீங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்கலாமே? குழந்தைகளுக்கு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்...நம் வீட்டுச் சூழலை ஆரோக்கியமாக வைத்தாலே பெரிய சாதனைதானே?

உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை இன்று செய்யலாமே?

Thursday, 19 January 2012

காணாமல் போய்க்கொண்டிருக்கும் குதுகூலப் பொங்கல்....

பொங்கலோ பொங்கல் என்று குதுகூலமாகக் கொண்டாடிய நாட்கள் நினைவில் வந்து போகின்றன. பொங்கல் வந்து விட்டாலே வீடு களைகட்டி விடும். ஒரு மாதம் முன்பே வெள்ளையடிப்பு நடக்கும். வீட்டு சாமான்கள் ஒதுங்க வைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் போது மறந்து போன விளையாட்டுச் சாமான்கள், இதர பொருட்கள் மாட்டும் போது கிடைக்கிற சந்தோஷம்...ஆகா..அனுபவித்தால்தான் தெரியும்...

அது போல், பொங்கலுக்கு முதல் நாள், வாசலில் செம்மண் கோலம் போட்டு அதற்கு பார்டராக சுண்ணாம்பு அல்லது கோலப்போடி போடுவதும், யார் வீட்டுக் கோலம் நல்லா இருக்குங்கிற போட்டியும் பொங்கலுக்கு சுருதி சேர்க்கும். பொங்கல் சாமான்கள் வாங்க சந்தைக்குப் போய் பேரம் பேசி வாங்குவது சுவாரசியம். பொங்கல் அன்று அதிகாலையிலேயே வீடும் தெருவும் களை கட்டி விடும்..அக்கா உங்க வீட்டுல பொங்கல் பொங்குச்சா என்ற பாசமான அக்கம் பக்கத்து வீட்டு விசாரிப்புகள்...(இப்போ எல்லாம் இப்படி விசாரிக்கிறாங்களா?...அக்கம்பக்கதுல யார் இருக்காங்க என்கிறதே பெரும்பாலும் தெரியாமல் போய் விட்டதே...பின் எங்கிருந்து விசாரிக்க!!)

 சூரிய உதயத்தின் போது பூசை நடக்கும். மதியம் பொங்கல் சோறு, சர்க்கரைப் பொங்கல், பல்வகை காய்கறிகள்...சுவையோ சுவை. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். வீட்டில் உள்ள மாடுகளுக்குக் கொண்டாட்டமான ஒரே நாள். மாடுகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு...ஒரே ராஜ உபச்சாரம்தான்.

அடுத்தது, சிறுவீட்டுப் பொங்கல். செம்மண்ணில் காம்பவுண்டுடன் வீடு அமைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும். வாண்டுகளுக்கு உகந்த பொங்கல் இது..(இந்தப் பொங்கல் அனேகமாகக் காணாமல் போய் விட்டதோ!)

மூன்று நாட்கள் களை கட்டியிருக்கும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் இன்று கனவு போல் இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஊரில் இருந்தாலும் வாசலில் பொங்கல் வைப்பது தொடர்ந்தது. என் அம்மாவால் முடியாததால், இப்போது காஸ் அடுப்புப் பொங்கலாக மாறி விட்டது. ஆனால், தற்போது பெரும்பாலும் நகரங்களில் பொங்கல் கொண்டாட்டம் வீட்டின் உள்ளேயே முடிந்து விடுகிறது. இன்றையக் குழந்தைகள் நாங்கள் எல்லாம் சிறுவயதில் அனுபவித்த குதுகூலப் பொங்கல் கொண்டாட்டத்தை இழந்து விட்டார்களே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது...

Wednesday, 18 January 2012

தேங்காயாக இருந்து கொட்டாங்குச்சியாக மாறிய கிராமங்கள்...

இயற்கை விவசாய ஆர்வலர் திரு. நம்மாழ்வார் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சொன்ன ஒரு விசயம் எல்லோரையும் யோசிக்க வைக்கும். முன்பு 'தேங்காயாக இருந்த கிராமங்கள் இன்று கொட்டாங்குச்சியாக மாறி விட்டன' என்பதே அது. எத்தனை யதார்த்தமான விசயம்! மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன அப்படி இருக்கு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், கூர்ந்து பார்த்தால் அதில் இயற்கையென்னும் யதார்த்தத்தைத் தொலைத்து விட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் மனித சமுதாய பாதிப்பு புரியும். இன்று விளை நிலங்கள் விஷ நிலங்களாக மாறி விட்டதுதான் யதார்த்தம். இரசாயன உரங்கள், கொடிய பூச்சி கொல்லி மருந்துகள் என பல ஊறு விளைவிக்கக் கூடிய விசயங்களைச் சார்ந்தே இன்றைய விவசாயம் இருக்கிறது. விளைபொருள் உற்பத்தி பெருகினாலும், இன்று நாம் பெரும்பாலும் உண்பது விஷ உணவுக்களைத்தான். இதன் தாக்கம் இன்று பல நோய்நொடிகள். இன்றும் பலர் தாங்கள் உண்பது விஷம் என்று அறியாமல் இருப்பது பரிதாபம்.

இயற்கைக்கு எதிரான நம் செயல்களின் பலனை இன்று நாமே சந்திக்க வேண்டிய கட்டாயம். பருவநிலை மாறுதல்கள், எதிர்பாரா இயற்கைப் பேரிடர்கள் என்று இயற்கை நமக்கு எதிராகத் திரும்பியது உண்மை. உஷ்ஷ்..ப்பப்பா என்ன வெயில் என்பவர்கள் அதற்குக் காரணம் இயற்கை அல்ல, இயற்கைக்கு எதிராக நாம் செய்த சதியின் பிரதிபலன்தான் என்பதை உணரவில்லை என்பதே கவலை தரும் விசயம். மரங்களினால் நமக்கு என்ன பயன் என்று அறியாமலே மரங்களை வெட்டிச்சாய்க்கும் பலர் இன்றும் உள்ளனர்.

இயற்கை விவசாயம் என்று பிரபலமாகப் பேசப்படும் இன்றைய விசயம் ஒன்றும் புதிது இல்லை. நம் முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததை இப்போது நாம் செய்ய முனைகிறோம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகளின் மேல் பூச்சிகொல்லி மருந்து காணப்படுவது உண்மை. அதுதான் நல்லா கழுவி விடுகிறோமே என்பவர்களுக்கு ஒரு விசயம். தாவரங்கள் இத்தகைய விஷங்களை உட்கிரகித்து, அவை அவற்றுக்குப் பயன்படாததால் சேர்த்து வைத்து விடும். இதை நாம் கழுவி வெளியேற்ற முடியாது. பூச்சி கொல்லி மருந்துகள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை அந்த மருந்துடன் வரும் விவரங்களைப் படித்தாலே தெரியும். மனித எண்ணிக்கை உயர்வு சார்ந்த உணவு உற்பத்திப் பெருக்கம் நோய்களை அதிகரித்திருப்பதுதான் வேதனை. இத்தகைய விஷங்கள் விளைநிலங்களைப் பாழ்படுத்துவது உண்மை. நாம் உண்ணும் உணவே விஷமாகி நம்மை அச்சுறுத்துகிறது...